மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த பாய்: பிறந்த நாளில் முதல்வரிடம் வழங்க நெசவாளர்கள் முடிவு

வந்தவாசி: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா அகரம்சேரி பகுதியை சேர்ந்த பாய் நெசவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்காக அவரை நேரில் சந்தித்து சிறப்பு பரிசு கொடுக்க கருதினர். அதன்படி பாயில் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்து வழங்குவது என முடிவு செய்தனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான சங்கர்(50) என்பவரை அணுகினர். இவர் 60க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் பாய்கள் தயாரித்து சென்னைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்.

மேலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு மணமகன், மணமகள் பெயர் பொறித்த பாய்களை விற்பனை செய்து வருகிறார். இதையடுத்து சங்கரிடம் தங்கள் விருப்பத்தை அகரம்சேரி பாய் நெசவாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சங்கர் கோவையில் உள்ள பட்டுத்தறி நெசவு டிசைனரிடம் உதவி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த பாயை 2 நாட்களில் உருவாக்கியுள்ளார். இதற்காக  4 வர்ணங்கள் கொண்ட கோரையை பயன்படுத்தியுள்ளார். வழக்கமாக 2 ஆயிரம் கோரையில் பாய் தயாரிக்கிற நிலையில் முதல்வர் உருவம் பொறித்த பாய் தயாரிக்க 3 ஆயிரம் கோரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: