ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் நச்சு காற்றை பரப்பி அவர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அந்நாட்டு அமைச்சர் அதிர்ச்சி தகவல்

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பி அவர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார். பெண்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்படும் சம்பவம் நடந்துவருவதாக ஈரான் துணைக் கல்வி அமைச்சர் யூன்ஸ் பனாஹி தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈரானின் கோம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பிற நகரங்களில் மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்படும் சம்பவம் நடந்துவருகிறது. அனைத்துப் பள்ளிகளையும், குறிப்பாகப் பெண்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது என அவர் கூறினார்

கடந்தாண்டு நவம்பரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போருஜெர்டிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியின் 50 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லொரெஸ்தானின் துணை ஆளுநர் மஜித் மொனெமி கூறினார்.  ஆனால், இது தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை வதந்திகள் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் யூசுப் நூரி கூறியிருந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் ஒரே அடிப்படையிலான விஷம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பிப்ரவரி 14 அன்று, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கவர்னரேட்டுக்கு வெளியே கூடி, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: