ஆளுநர் ரவி பதவியில் நீடிக்க ஜனாதிபதி அனுமதிக்க கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்

புதுச்சேரி: நாடு முழுவதும் உள்ள ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய கருத்தரங்கம் புதுவை கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தெலங்கானா தேசிய செயலாளர் நாராயணா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி., புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா மற்றும் கேரளா அமைச்சர்கள், புதுச்சேரி நிர்வாகிகள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பலரும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் இந்திய கம்யூ., கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைக்கு ஒன்றிய அரசு, யாரிடம் இருக்கிறது என்றால், நாட்டின் சுதந்திரத்துக்கு போராடாத, நாட்டு மக்களை மதரீதியாக பிரித்து கலவரத்தை உருவாக்குகிற, நாட்டை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க துணை நிற்கின்ற பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் பிடியில் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை ஒன்றிய பாஜக அரசு தகர்த்து வருகிறது. அதனால் ஜனநாயகம் நிலைகுலைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர்களை நியமிப்பது அரசியல் நியமனமாக மாறிவிட்டது. தற்போது புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பாஜகவில் பொறுப்பில் இருந்தவர்களே.

சாமானியரைப் போல சனாதனம் பற்றி பேசும் தமிழக ஆளுநர் போன்றோர், பதவியில் நீடிப்பதற்கு குடியரசு தலைவர் அனுமதிக்க கூடாது. ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்திய ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானவைதான். இந்தியாவை கார்ப்பரேட் மயமாக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தியாவை பாதுகாக்க, அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை, ஜனநாயகத்தை காப்பாற்ற, புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கு போராட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: