மாசி கிருத்திகையை முன்னிட்டு காசிமேட்டில் மீன்பிரியர்கள் வரத்து குறைந்தது: மீன் விலையை அதிகம் வைத்து விற்பனை

சென்னை: மாசி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை காசிமேட்டில் மக்கள் கூட்டம் நேற்று வெகுகுறைவாக காணப்பட்டது. வரத்து குறைவால், மீன்கள் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து காணப்பட்டது. முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். அப்படிப்பட்ட மாசி கிருத்திகை நேற்று வந்தது. இந்த நாளில் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதேநேரத்தில், வீடுகளில் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால் எப்போதும் அதிகாலை முதல் கூட்டம் நிரம்பி வழியும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று மக்கள் கூட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் சிவராத்திரி, அமாவாசை வந்ததால் குறைந்த அளவியே கூட்டம் காணப்பட்டது. அதேநேரத்தில் நேற்று காசிமேட்டிற்கு மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

அதாவது கடந்த வாரத்தை விட மீன் விலை கிலோவுக்கு ₹50 வரை அதிகரித்து இருந்தது. கடந்த வாரம் முழு வஞ்சிரம் மீன் ₹650க்கு விற்கப்பட்டது, இது நேற்று ₹700க்கு விற்பனையானது. சுத்தம் செய்யப்பட்ட வஞ்சிரம் மீன் ₹1000க்கும், சீலா ₹250, வெள்ளை வவ்வால் ₹850லிருந்து ₹1000க்கும் விற்பனையானது. மேலும் கருப்பு வவ்வால் ₹700, சங்கரா ₹400, கடல் விரால் ₹450, சுறா ₹300, இறால் ₹300, களவான் ₹450, நண்டு ₹300 முதல் ₹350 வரையிலும், கொடுவா ₹400, பாறை ₹350, அயிரை ₹350க்கும் விற்பனையானது. மீன் விலை அதிகரித்த போதிலும், மீன் வாங்க வந்தவர்கள் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.

Related Stories: