காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜவை 100க்குள் வீழ்த்தலாம்: நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு

புர்னே: ‘காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கூட்டணி சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை 100 தொகுதிக்குள் தோற்கடிக்க முடியும்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பாஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பீகாரின் புர்னேவில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணி பேரணி நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற நிதிஷ் குமார் பேசியதாவது:

காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் பாஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும். ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். எனது பரிந்துரையை அவர்கள் (காங்கிரஸ்) ஏற்கா விட்டால் என்ன நடக்கும் என்பதை அவர்களே அறிவார்கள்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும், பாஜவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் எனக்கு இலக்கு. இதை நிஜமாக்கத்தான் முயற்சித்து வருகிறேன். நாடு முழுவதிலும் இருந்து பாஜ கட்சி விரட்டப்பட வேண்டும்’’ என்றார்.

மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் பாஜ

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் தான் சிங்கப்பூரில் சிறுநீரக அறுவை சிகிச்சை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில் புர்னே பேரணியில் டெல்லியில் இருந்தபடியே வீடியோகான்பரன்ஸ் மூலமாக அவர் உரையாற்றினார்.

அப்போது லாலு கூறுகையில்:

பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கு எதிரானவை. மகா கூட்டணியான நாங்கள் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 2025ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடிப்போம். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை. அரசியல் சட்டத்தை மாற்றி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றன. எங்களது போராட்டம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் வழிமுறைகளை தான் பாஜ பின்பற்றுகிறது. வரும் தேர்தலில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பீகார் முயற்சி எடுத்துள்ளது என்றார்.

Related Stories: