ஆர்.எஸ்.மங்கலத்தில் 12,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பெரிய கண்மாய் வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகையாற்றில் இருந்து கீழநாட்டார் வழியாக தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதையும் தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், தமிழ்நாட்டில் 2வது மிகப்பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயின் மொத்த கொள்ளளவு  1,205 மில்லியன் கனஅடி.

இந்த கண்மாய் மூலம் ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமின்றி  சுற்றுப்புற கிராமங்களில் உள்ள என  72 சிறுகண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதால், அப்பகுதி நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றது. இக்கண்மாய் மூலம் 5,500 ஏக்கர் நேரடி பாசனத்தின்  மூலமாகவும், 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மறைமுக பாசனமும் என 12,500 ஏக்கர்  நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. இச்சிறப்புமிக்க கண்மாய்  பாசனத்தால்தான், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக ஆர்.எஸ்.மங்கலம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாரை பறக்க முடியாத 48 குறிச்சிகளை  (கிராமங்கள்) கொண்ட இக்கண்மாய் 20 கிமீ நீளம் கொண்டது.  1 கி.மீ.க்கு தலா  ஒரு மடை வீதம் மேலமடை, கீழமடை, வல்லமடை, புல்லமடை, ராமநாத மடை, சிலுகவயல்  மடை, செட்டியமடை, பட்டாபிராம மடை, ஒரளிமடை, பெருமாள் மடை,  பிச்சனாகோட்டைமடை, பெத்தார்தேவன் கோட்டை மடை, நோக்கன்கோட்டை மடை,  பெரியாண்பச்சேரி மடை, சூரமடை , கல்லுடைப்பு மடை, பொன்னாக்கோட்டை மடை, தாமரை  மடை, புலி வீர தேவன் கோட்டைமடை, ராவமடை என 20 மடைகள் இக்கண்மாயில் உள்ளன. இதில் பெரும்பாலான மடைகள் சேதமடைந்து காணப்பட்டதால் தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்மாயை தூர்வார வேண்டும் எனக் கோரி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இப்பகுதி விவசாயிகள் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக  கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாகவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காகவே கடந்த 10 ஆண்டு காலங்களாக எதுவுமே நடைபெறவில்லை. அதிமுக ஆட்சி முடிவடையும் சமயத்தில் இருந்த போது, ரூ.19 கோடி தேவைப்பட்ட நிலையில் ரூ.2 கோடி நிதியை மட்டும் ஒதுக்கீடு செய்ததோடு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும், இந்த கண்மாயை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பழுதடைந்த நிலையில் இருந்த தலைமதகு உள்ளிட்ட மடைகளை புதிதாக கட்டப்பட்டன. கரைகளையும் சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதை திமுக அரசின் சாதனையாகவே  ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகள்  கருதுகின்றனர்.

இதற்காக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து  வருகின்றனர்.பொதுவாக இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதாலும் வைகையின் உபரிநீர் பாசனம் தவிர வேறு எந்த  ஆற்றுப்பாசனமோ அல்லது ஏரி பாசனமோ, ஆழ்துளை கிணற்று பாசனமோ  கிடையாது. மழையை நம்பி மட்டுமே விவசாயம் என்ற நிலையில் உள்ளதால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. எனவே மடைகளையும், கழுங்கு மற்றும் கரையை சீரமைத்து கொடுத்தமைக்கு தமிழக அரசுக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று மக்கள் கூறி வருகின்றனர்.

இந்த கண்மாய்க்கு வைகையில் இருந்து மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர் பரமக்குடி அரசடி வண்டல், கருகுடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடையும் விதமாக ஆற்று கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக வைகையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு எப்போதாவது தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் அப்படி தண்ணீர் திறந்து விட்டால், பாண்டியூருக்கும் அரசடி வண்டலுக்கும் இடையில் உள்ள கீழநாட்டார் கால்வாய் வழியாக பந்தப்பனேந்தல், நகரம் பணிதிவயல், அனுச்சகுடி, அரியான்கோட்டை வழியாக உள்ள வரத்து கால்வாய் மூலம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்து சேரும்.

இந்த ஆண்டு வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால்  மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு, வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் கீழ நாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வரத்து கால்வாயில் சில பகுதியில் முட்புதர்கள் அடர்த்தியாக உள்ளதால் வைகை தண்ணீர் கண்மாய்க்கு முழுமையாக வந்து சேரவில்லை. கண்மாய் முழு கொள்ளளவை எட்டவில்லை.

முழு கொள்ளளவை எட்டியிருந்தால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதிகள் மட்டுமின்றி, அருகே உள்ள 72 சிறு கண்மாய் பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களும் பயனடைந்திருக்கும். எனவே தமிழக அரசு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வரத்து கால்வாய்களை முழுமையாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: