கொட்டாம்பட்டி அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: கட்லா, கெழுத்தியை அள்ளிச் சென்றனர்

மேலூர்: கொட்டாம்பட்டி அருகே பாரம்பரிய முறைப்படி வலை, கச்சா, ஊத்தா போன்ற உபகரணங்களை பயன்படுத்தி சமத்துவ மீன் பிடிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனர். கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டி கோனார் கண்மாயில் நேற்று பாரம்பரிய முறைப்படி வலை, கச்சா, ஊத்தா போன்ற உபகரணங்களை கொண்டு, ஜாதி, மத பேதமின்றி மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். விவசாய பணிகள் முடிவடைந்து, கண்மாய், குளங்களில் நீர்வற்றி வருவதால், மேலூரை சுற்றி உள்ள பல கண்மாய்களில் அடிக்கடி மீன்பிடி விழா நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த மீன்பிடி திருவிழா மாசி சிவராத்திரி திருவிழா முடிந்தவுடன் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவாகும். இதில் கிராம பெரியவர்கள் துண்டு வீசி, மீன் பிடிக்க அனுமதி அளித்தவுடன், கண்மாய் கரையில் சுற்றி நின்றிருந்த மங்காளம்பட்டி, அய்யாபட்டி, குன்னாரம்பட்டி உட்பட பல்வேறு கிராமத்தில் இருந்து வந்த மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கி மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெழுத்தி, விரால் மீன்களை பிடித்தனர். கண்மாயில் அதிகளவு தண்ணீர் இருந்ததால், மீன்களை பிடிக்க பொதுமக்கள் அதிகம் சிரமப்பட்டனர். கிடைத்த மீன்களுடன் மகிழ்ச்சியாக சென்றனர்.

Related Stories: