கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து வழக்கு தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.    

சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதே போல இந்த வழக்கிலிருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ்-ன் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுக்களின் விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் நடைபெற்று வந்தது. யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளதாகவும், அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டார்.

இதையடுத்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், அரசுத்தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதகவும் வாதிட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில்பாதை ஆகிய பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து வழக்கு தீர்ப்பினை இன்று நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.   

Related Stories: