தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த நெல்களை அறுவடை செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து வருகிறது. மேலும் இயந்திரம் மூலம் கட்டிய வைக்கோல் கட்டுகளும் வயலில் தயார் நிலையில் உள்ளன.தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் இந்தாண்டு சம்பா சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர்-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை மற்றும் தனியார் கடைகளில் பெற்று நெல்லை நேரடி விதைப்பு செய்தனர்.
கடந்த புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்த வயல்களில் தற்போது நெல்மணிகள் முதிர்ச்சி பெற்று அறுவடையை தொடங்கினர். இந்த அறுவடை பணிகளானது கடந்த ஒருவாரத்திற்கு முன்பு நிறைவு பெற்றது.
பருவம் தவறி நடப்பட்ட 30 நாள் பயிர்களை கடந்த (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் காலதாமதமாக நடவு செய்த பயிற்சிகள் முதிர்ச்சி அடைந்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.இந்த அறுவடை பணிகளானது தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. சம்பா சாகுபடியில் ஏடிடீ 44 என்ற ரகமானது கூடுதல் விளைச்சலை கொடுத்து வருவதாகவும், முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் இந்தாண்டு சம்பா சாகுபடி செய்த விவசாயிகளக்கு நல்ல மகசூல் கிடைத்து உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
தற்போது கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் இந்தாண்டு சம்பா நெல் பயிர்களை நடவு செய்யப்பட்டு உள்ள வயல்களில் நெல்மணிகள் முதிற்சி அடைந்து அறுவடை பணிகளை தொடங்கிய நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவடை பணிகள் நிறைவு பெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.இதேபோல் முதல் பருவத்தில் சம்பா சாகுபடி பணிகளை செய்ய விவசாயிகள் அறுவடையை முடித்துவிட்டு குறுவை நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலையும் இயந்திரம் மூலம் கட்டி வைத்துள்ளனர்.