*ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்று ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கூட்டத்தில் கலெக்டர் பேசினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் ஊராட்சியின் வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்களை கட்டி வாடகை வருவாயை அதிகரிக்க வேண்டும். தற்போது, சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தங்களுடைய ஊராட்சி பகுதிகளில் முற்றிலும் தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும். அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் மீது அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வித சமரசமும் இருக்க கூடாது என உச்சநீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரப்பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு, ஊராட்சி சாலைகளை பராமரித்து மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகளை கவனம் செலுத்த வேண்டும். ஊராட்சிகளில் உள்ள பொது கிணறுகள், குளங்கள் தூர்வாரப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் குளங்களில் கழிவுநீர் சென்றடையாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். 14வது மத்திய நிதிகுழு மானிய திட்ட நிதியின் கீழ் நிலுவையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு பணிகளை மேற்கொள்ளவும், 15வது நிதிகுழு மானிய திட்ட நிதியின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளுக்கு வரும் 28ம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.கிராம ஊராட்சிகளில் நிதிமேலாண்மையை மேம்படுத்தி கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் எளிய வகையில் கணக்குகளை கையாள வெளியிடப்பட்டுள்ள அரசாணையை பின்பற்ற வேண்டும்.மேலும், இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் தெரிவித்துள்ள அனைத்து கருத்துக்களும் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதும் ₹10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இந்தவிருதுக்கு இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.