திருப்பூர் மத்திய பேருந்து நிலைய பேருந்து வழித்தடம் நடுவே போதையில் படுத்து உறங்கிய ஆசாமி; தூக்கிச் சென்று ஓரம் படுக்க வைத்த 12ம் வகுப்பு மாணவன்

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டது. நகரின் மைய பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் தினந்தோறும் லட்ச கணக்கான பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மது போதை நபர்கள் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் பேருந்து நிலையம் மாறி வருகிறது. நாள் தோறும் மது அருந்தியவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.  

இன்று மாலை மது போதை ஆசாமி ஒருவர் மிதமிஞ்சிய போதையில் பேருந்து நிலையத்தின் நடுவே படுத்து உறங்கி கொண்டிருந்தார். பேருந்து செல்லும் வழி என்பதால் அவர் மீது பேருந்து மோதி விடும் அபாயம் இருந்த நிலையிலும் பேருந்துகள் செல்வதற்கு இடையூறாக இவர் படுத்து உறங்கிய அவரை எழுப்பி அப்புறப்படுத்த பலரும் அஞ்சினர்.  அப்போது சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் அவரை எழுப்ப முயன்றார் ஆனால் அதிகப்படியான போதையில் தள்ளாடிய நபரை கண்ட 12 ம் வகுப்பு மாணவர் விரைந்து வந்து தூக்கி ஓரமாக படுக்க வைத்து விட்டு சென்றார். பொதுமக்கள் பலர் பயன்படுத்தும் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: