குளித்தலை அருகே இரும்பூதிபட்டியில் எல்கை பந்தயபோட்டி

குளித்தலை : குளித்தலை அருகே இரும்பூதிபட்டியில் எல்கை பந்தயபோட்டி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி மற்றும் சந்தையூர் ஊர் பொதுமக்கள் சார்பில் 12ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டியை முன்னிட்டு எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஒத்த மாடு, இரட்டை மாடு, சிறிய மாடு, ஆண்களுக்கான சைக்கிள் ரேஸ், பெரிய குதிரை, சிறிய குதிரை என பல்வேறு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதைக்காண குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சாலையின் இரு புறமும் நீண்ட தொலைவில் நின்று கண்டு களித்தனர். அப்போது சிறிய குதிரைகளுக்கான எல்கைபந்தயம் இரும்பூதிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் தொடங்கி சுமார் 15 கிலோ மீட்டருக்கு விடப்பட்டது. இதில் 13 சிறிய குதிரைகள் எல்லை கோட்டை நோக்கி சீறிபாய்ந்து ஓடத் தொடங்கியது. அப்போது ஓடிக்கொண்டிருந்த ஒரு குதிரை வண்டியின் பின்புறம் பைக்கில் வந்த நபர் விரட்டிக்கொண்டே வந்துள்ளார்.

அப்போது விழா நடத்தும் கமிட்டியாளர்கள் பைக்கில் விரட்டி வந்தவரை குதிரை வண்டி பின்புறம் துரத்தாமல் ஓரமாகச் செல்லுங்கள் பின் தொடர்ந்தால் குதிரை வண்டிக்கு பரிசு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் மீண்டும் குதிரையை விரட்டி வந்ததாகவும் அதை மீண்டும் கேட்ட விழா கமிட்டியாளரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை போலீசார் தகராறு நடந்த இடத்திற்கு சென்று. மேலும் தகராறு ஏற்படாமல் இருக்க பெரிய குதிரை எல்கை பந்தய போட்டியை போலீசார் நடத்த வேண்டாம் என கூறியதையடுத்து விழா கமிட்டியாளர்களும் போட்டியை நடத்தாமல் நிறுத்தி வைத்தனர்.

Related Stories: