பிரச்னைக்கு தீர்வு ஐஎம்எப்பிடம் இல்லை பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டது: வௌிப்படையாக அறிவித்த பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர்

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டது. திவாலான நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் வௌிப்படையாக தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தான், நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளது. கடனுதவியை பெற சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின் பேரில், பெட்ரோல், டிசல், மண்எண்ணெய் உள்பட எரிபொருள்களின் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பால், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சியால்கோட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் நாடு ஏற்கனவே வாங்கிய கடனையே திருப்பி செலுத்தவில்லை. பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டது. நாம் இப்போது திவாலான நாட்டில் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம். நாம் அரசியலமைப்பு சட்டங்களை மதித்து பின்பற்றப்படாததே நமது இந்த நிலைமைக்கு காரணம். இதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட அனைவருமே பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால், நம்முடைய பிரச்னைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை. அதற்கான தீர்வு நம் நாட்டிலேயே உள்ளது. நம்மை நிலைநிறுத்திக் கொள்ள நாம் சொந்த கால்களில் நிற்க வேண்டியது அவசியம்” இவ்வாறு கூறினார்.

Related Stories: