நிதிஷ்குமார் கருத்து வரவேற்கக் கூடியது காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி நிச்சயம் சாத்தியமற்றது: ஜெய்ராம் ரமேஷ் பதில்

புதுடெல்லி: ‘காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஓய்வெடுக்காமல் இதே வேகத்தில் செயல்பட்டு எதிர்க்கட்சிகள் இணைந்த கூட்டணியை அமைத்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வெறும் 100 தொகுதிக்குள் சுருட்டி விடலாம்’’ என்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் 24ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சட்டீஸ்கரின் ரவா ராய்பூரில் நடக்க உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது கே.சி.வேணுகோபால், ‘‘மாநாட்டின் முதல் நாளில் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூடி, காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செ்ய்யும். வரும் மக்களவை தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் தனது பங்கை அறிந்துள்ளது.

அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நிச்சயம் வலுவான கூட்டணி அமைப்போம்’’ என்றார். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தோல்வி அடையும்.  நிதிஷ் குமாரின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணி குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். வலுவான காங்கிரஸ் இல்லாத  எதிர்க்கட்சி கூட்டணி அமைவது சாத்தியமில்லை. மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்த கூட்டணியை அமைப்போம்’’ என்றார்.

Related Stories: