வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்புமணி வேண்டுகோள்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு நிறைவடைவதற்குள் அரசு வழங்க வேண்டும் என முதல்வரிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும்  பாமக செய்தித்தொடர்பாளர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதன்பின்னர் நிருபர்களிடம் பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 2.5 சதவீதமும், இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 7 சதவீதமும் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் கடந்தாண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மீண்டும் உருவாக்கப்பட்டது.

இதில், வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 3 மாதத்தில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து அரசுக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இதனை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் 40 சதவீதம் உள்ளனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளது. வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது.

சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு தடை  விதித்தபோது 7 காரணங்களை கூறியது. ஆனால், அதில் 6 காரணங்கள் தவறு என உச்ச  நீதிமன்றம் கூறிவிட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை  சரிபார்த்து, இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே  சரியானது. தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு காவிரி நீரில் 500 டிஎம்சி கடலில் வீணாக கலந்துள்ளன..

கொள்ளிடம் உபரிநீரை அரியலூர் மாவட்ட ஏரி, குளங்களுக்கு நிரப்பும் வகையில் அரியலூர் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவலர்களுடன் மாதாந்திர கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: