அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்காததால் பணி நீக்கம் இறந்த கண்டக்டர் மகனுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்: பொது மேலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்காததால் பணி நீக்கம் செய்யப்பட்டு இறந்த கண்டக்டரின் மகனுக்கு, பணப்பலன்கள் வழங்க பொது மேலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருணையானந்தன். அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தில் கடந்த 21.10.1985ல் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கவில்லை என்ற புகாரில், கடந்த 1.12.2003ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பணித்தொடர்ச்சியுடன் சம்பளம் வழங்க 8.10.2012ல் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. அதில், கருணையானந்தன் கடைசியாக பெற்ற சம்பளத்தை கணக்கிட்டு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. வழக்கு நடந்து வந்த நிலையில் கருணையானந்தன் ஓய்வு பெற்றார். இதனால், அவரது பணப்பலன்கள் நிறுத்தப்பட்டன. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், அவருக்குரிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவும் நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் இருந்த காலத்தில் கருணையானந்தன் இறந்தார். இதையடுத்து அவரது மகன் ராமன் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சேவியர் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால், பிரதான மனுதாரர் பணப்பலன் பெறாமலே இறந்துவிட்டார். அவரது பணப்பலன்களை அவரது வாரிசுக்கு வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, முந்தைய உத்தரவுப்படி கருணையானந்தத்தின் பணப்பலன்களை அவரது மகனிடம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர், போக்குவரத்து கழக நிதி அறக்கட்டளை நிர்வாகி ஆகியோர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: