பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம் சொரோஸ் கோடீஸ்வரர் மட்டுமல்ல, ஆபத்தானவர்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: ‘பிரதமர் மோடியை விமர்சித்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரோஸ் பெரிய பணக்காரர் மட்டுமல்ல, ஆபத்தானவரும் கூட’ என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரோஸ், ‘‘அதானியும், பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அதானியின் பங்குகள் சரியும் நிலையில், அதைப் பற்றி பேசாமல் மோடி மவுனம் காக்கிறார். அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். அதானியின் சரிவு ஆட்சியின் மீதான மோடியின் பிடியை பலவீனமாக்கிவிடும். இது இந்திய ஜனநாயகத்தில் மறுமலர்ச்சிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும்.மோடி ஒன்றும் ஜனநாயகவாதி அல்ல’’ என்றார். இதற்கு பாஜ தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சிட்னியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘சொரோஸ் நியூயார்க்கில் இருந்து கொண்டு, முழு உலகமும் எப்படி இயங்க வேண்டும் என்பதை தனது கருத்துகள் தான் தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் வெறும் ஒரு பணக்காரர், வயதானவர், கொள்கை பிடிவாதக்காரராக இருந்தால் அவரது பேச்சுகளை ஒதுக்கிவிடலாம். ஆனால் அவர் பெரிய பணக்காரர் என்பதுடன் ஆபத்தானவரும் கூட.சில ஆண்டுகளுக்கு முன் இதே மாநாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். வெளியில் இருந்து செய்யப்படும் இதுபோன்ற பயமுறுத்தல்கள், நமது சமூக கட்டமைப்பில் உண்மையிலேயே சேதத்தை ஏற்படுத்துகிறது. சொரோஸ் போன்ற நபர்கள் அவர்கள் விரும்பும் நபர் வெற்றி பெற்றால் தேர்தல் நல்லபடியாக நடந்தது என்பார்கள். முடிவு எதிராக வந்தால், குறைபாடுள்ள ஜனநாயகம் என குறை கூறுவார்கள்’’ என்றார்.

Related Stories: