பிப். 18ல் மாசி மகா சிவராத்திரி விழா: தென்மாவட்ட குலதெய்வ கோயில்களில் பணிகள் தீவிரம்

சிவகங்கை: வரும் 18ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென்மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோயில்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தென்மாவட்ட மக்களின் மண் சார்ந்த பாரம்பரிய வழிபாட்டில் முன்னணி வகிப்பது குலதெய்வ வழிபாடு. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி பெருவிழா சிவன் கோயில்களில் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்தின் குலதெய்வ கோயில்களிலும் கொண்டாட்டத்தின் உச்சம் தொடுகிறது. நடப்பாண்டிற்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா வரும் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குலதெய்வக் கோயில்கள் உள்ளன. அன்றாட வழிபாடுகள் நடந்தபோதும், இக்கோயில்களில் சிவராத்திரி தினத்தில் நடக்கும் சிறப்பு பூஜை மகத்தானது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிவராத்திரி திருநாளுக்கு தங்களது குலதெய்வங்களை வணங்கிட மக்கள் கூடுகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா அரியாண்டிபுரம் கிராமம் வடக்கு குடியிருப்பில் இருக்கும் பெரியகருப்பணசுவாமி, மீனாள் கோயில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மாணிக்கம் கூறும்போது, ‘‘மாசி 6ம் தேதி (பிப். 18) கொண்டாடும் இந்த மாசி களரி விழாவான சிவராத்திரிக்கென தென்மாவட்டம் முழுவதும் கடந்த இரு வாரங்களாகவே சுவாமி சிலைகளை சுத்தப்படுத்துவது, கோயிலை வெள்ளையடித்து புதுப்பிப்பது, பந்தல் அமைப்பது என குலதெய்வ கோயில்களை தயார்படுத்தும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது’’ என்றனர்.

சிவராத்திரினா என்ன தெரியுமா?

சிவபெருமானுக்குரிய பிரியமிகு ராத்திரியே சிவராத்திரியாகும். இது ஓர் விரத நாளாகும். சிவம் என்றால் மங்களம், இன்பம் என்ற பொருள் தருகிறது. ஆண்டுதோறும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று இந்த மகா சிவராத்திரி வருகிறது. இந்நாளில் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால், வாழ்வில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலும் என்பது ஐதீகம்.

Related Stories: