ஜென் z இளசுகள்...ட்ரெண்டி அசைவங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!

முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றாலே விடிந்தும் விடியாமலும் கடைக்குப் போய் மட்டனோ, சிக்கனோ, மீனோ வாங்கிவந்து கறிச்சோறு உண்டால்தான் அந்த தினமே முழுமையாகும். ஆனால், இப்போது அதெல்லாம் பழைய ட்ரெண்டாகிவிட்டது. கையில் இருக்கும் போனை எடுத்து ஒரு ஆப்பைத் தட்டினால் பிரியாணி, சிக்கன் 65, லாலிபாப், மட்டன் சுப்கா, ஷவர்மா, பார்பிக்யூ என முனியாண்டி விலாஸே வீடு தேடி வந்துவிடுகிறது.

வீட்டை விட்டு எங்கும் போகாமலே அசமந்தமாய் முன் மதியத்தில் எழுந்து ஸொமாட்டாவிலோ ஸ்விக்கியிலோ ஆர்டர் போட்டுவிட்டு, வந்ததைத் தின்றுவிட்டு, மதியத் தூக்கம் போட்டு, ஒரு வார ஞாயிறை ஒய்யாரமாய் தட்டிவிட்டு மறு வார ஞாயிறுக்கு மையலுடன் காத்திருக்கிறார்கள் இந்த ஜென் Z தலைமுறை.இளைஞர்களைக் கவர வேண்டும் என கடைக்காரர்களும் மண்பானை பிரியாணி, மூங்கில் பிரியாணி, கிழி பிரியாணி என விதவிதமாய் அசத்துகிறார்கள். இவற்றில் தரமிருக்கிறதா செய்யப்படும் உணவுகள் சுத்தமாய் தயாராகிறதா என்பதைப் பற்றி எல்லாம் யாருக்குமே அக்கறையில்லை.

ருசியாய் இருந்தால் போதாதா நாக்குக்கு கீழே போவதைப் பற்றி நமக்கென்ன கவலை என்ற மனநிலை பலரிடம் இருக்கிறது. உணவில் சுவை எவ்வளவு முக்கியமோ ஆரோக்கியம் அதைவிட அவசியம்.

சுத்தம், பக்குவம் அவசியம்!

வீடு, ரோட்டோர சிறிய கடை, அல்லது பெரிய ரெஸ்டாரன்ட் என எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்வதும், சரி வர சமைப்பதும் முக்கியம். நோய் வாய்ப்பட்ட அல்லது அழுகிய நிலையில் உள்ள மீன், முட்டை, கோழி, மட்டன் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தரமானவற்றை பயன்படுத்த வேண்டும். சமைக்கும் அசைவப் பொருள் வேகவைப்பதாக இருந்தால் முழுமையாக வெந்தும், வறுப்பனவற்றை முழுமையாக வறுக்கவும் வேண்டும். குழம்பாக இருந்தால் நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.

மட்டன் சிக்கன் போன்றவற்றை உப்பு, மஞ்சள்தூள் போட்டு கிருமிகள் அகலும் வரை தண்ணீரில் நன்றாகச் சுத்தம்  செய்ய வேண்டும். நல்ல சுத்தமான நீரில் சமைக்க வேண்டும். கண்டிப்பாக அசைவ உணவுகளை சுத்தம் செய்யும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.மீன், மட்டன் முதலியவற்றை கழுவும்போது, அவை நன்றாக கெட்டியாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொழகொழப்புத் தன்மையுடன், உதிர்வதாக இருந்தால் அவை புதியன அல்ல, நாள்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் அவற்றில், கெட்ட வாடை வரக்கூடாது.

இறால் மீனைச் சுத்தம் செய்யும் போது அதில் உள்ள குடல் பகுதி, மண் போன்றவற்றை நன்றாக நீக்கிவிட்டு சமைக்க வேண்டும்.வீட்டில் தயாரிக்கும்போது குறைவான அளவில் சமைப்பதால் இறாலில் உள்ள குடலை முழுவதுமாக நீக்க நேரம் இருக்கும். ஆனால், உணவகங்களில் மொத்தமாக தயாரிக்கும்போது சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள்.

வினிகர் போன்ற ரசாயனங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சுத்தமான நீரில் மஞ்சள்தூள், உப்பு சிறிது எலுமிச்சை நீர் கலந்து சுத்தம் செய்தாலே போதுமானது. உணவகங்களில் இதுபோன்று நுணுக்கமாக சுத்தம் செய்வார்களா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அழுகாத மீன், கோழி, மட்டன் போன்றவற்றை உபயோகிக்கிறார்களா என்பதற்கும் உத்தரவாதமில்லை.அடுத்து, சமைப்பவரின் சுத்தமும் அவசியம், அவர் ஒழுங்காக நகங்களை வெட்டி, கைகள், தலைக்கு உறை அணிந்திருக்க வேண்டும்.

தரமான பலசரக்கு முக்கியம்!

சமைக்க பயன்படுத்தும் எண்ணெய் தரமாக இருக்க வேண்டும். பலமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது. புதிய எண்ணெயை உபயோகிக்க வேண்டும்.பொதுவாக, குழம்பு வகைகளுக்கு கடலை எண்ணெய், மீன் குழம்புக்கு நல்லெண்ணெய், கேரளா டைப் உணவுகளுக்கு தேங்காய் எண்ணெய், வறுப்பதற்கு ரீஃபைன்டு ஆயில் என ஒவ்வொரு வகை உணவுக்கும் அதற்கேற்ற  எண்ணெய் வகையைப் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியாக இல்லாமல் மிதமாக எண்ணெய் ஊற்ற வேண்டும்.

சில இடங்களில் மோனோ சோடியம் க்ளூக்கோமைட் என்ற சீன உப்பைப் பயன்படுத்துகிறார்கள். உண்ணும் உணவின் ருசியைக் கூட்டும் சுவையூட்டி இது என்றாலும் இதை அதிகமாகப் பயன்படுத்துவதால் செரிமானப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே, இவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். உணவு பாதுகாப்புத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு நிறமிகள் (Food Safety Colours) சில இருக்கின்றன. அவற்றை மட்டுமே உணவின் நிறத்தைக் கூட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அவற்றையும் பரிந்துரைக்கப்பட்ட அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

ஆனால், சில உணவகங்களில் வாடிக்கையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் நிறத்தை அதிகமாக உபயோகிக்கிறார்கள். இந்த நிறமிகளில் மீதியானதை மறுமுறை உபயோகிக்கவும் கூடாது. தற்போது, சந்தையில் புதினா சிக்கன் (Mint Chicken)  என ஒன்றை விற்பனை செய்கிறார்கள். இதில், உண்மையாகவே புதினாவை மட்டும் சேர்ப்பது இல்லை. புதினாவோடு அதன் நிறத்துக்காக பச்சை நிறமியையும் அதிகமாகச் சேர்க்கிறார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம் அல்ல.

உணவகங்கள் உஷார்

உணவு பாதுகாப்பு உரிமம் (Food Safety Certificate)  இந்திய உணவு பாதுகாப்புத் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சான்றிதழ் (FSSAI’s Licence) மற்றும் Hazard Analysis Critical Point Control - HACCP  Licence, அதாவது இங்கு தயாரிக்கப்படும் உணவுகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று. மேற்கூறிய அனைத்து சான்றுகள் மற்றும் உரிமங்களை வாடிக்கையாளர்களின் பார்வை படும் இடத்தில் உணவகங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது விதி. இவை வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை நாம் சரிபார்த்துதான் வெளி உணவகங்களில் உணவருந்தச் செல்ல வேண்டும்.

ட்ரெண்டி அசைவ உணவுகள் அலெர்ட்!

கடைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதாக இருந்தால் வழக்கமான  மட்டன், சிக்கன் குழம்புகள், வறுவல்களைச் சாப்பிடுவது நல்லது. கடல் உணவுகளில் நண்டு, இறால் போன்றவற்றால் உணவு விஷம் (Food poisoning) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கூடியவரை பாரம்பரியமான அசைவ உணவுகளையே சாப்பிடுவது நல்லது. புதுப்புது உணவுகளை ருசிக்காக என்றாவது ஒரு நாள் சாப்பிடுவது தவறில்லை. ஆனால், தரமான கடையா? அதைத் தயாரிப்பதில் அவர்கள் நிபுணர்களா என்பதைத் தெரியாமல் சாப்பிட வேண்டாம்.

தொகுப்பு - இந்துமதி

Related Stories: