சபரிமலையில் நாணயங்கள் மட்டுமே ரூ.10 கோடி வசூலானது: எண்ணும் பணி நிறைவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாணயங்கள் மட்டுமே ரூ.10 கோடிக்கு மேல் கிடைத்து உள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சபரிமலையில் நடந்து முடிந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் முந்தைய வருடங்களை விட அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோயில் வருமானமும் அதிகரித்தது. இந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் மொத்த வருமானம் ரூ.360 கோடியை தாண்டியது. இதற்கு முன்பு மண்டல, மகரவிளக்கு காலங்களில் கோயில் மொத்த வருமானம் ரூ.300 கோடியை தாண்டியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சபரிமலையில் காணிக்கையாக பெருமளவு நாணயங்கள் கிடைத்தன. கடந்த வருடம் நவம்பர் 16ம் தேதி முதல் நாணயங்களை எண்ணும் பணியில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் கிடைக்கும் நாணயங்கள் அதிகரித்து வந்தது. ஆகவே அவற்றை எண்ண முடியாத அளவுக்கு சபரிமலையில் மலை போல் குவிந்தன. இதனால் நாணயங்களை எண்ணுவதற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மொத்தம் 1220 ஊழியர்கள் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக நாணயங்கள் அனைத்தையும் தற்போது எண்ணி முடித்து உள்ளனர். இதில் ரூ.10 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள நாணயங்கள் கிடைத்து உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

* நடை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கும். வரும் 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இன்று முதல் 17ம் தேதி வரை நெய்யபிஷேகம், படிபூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

Related Stories: