வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வங்கி ஏடிஎம்களில் கிழிந்த, கறை படிந்த ரூபாய் நோட்டுகள்: மாற்ற முடியாமல் பொதுமக்கள் அவதி

வேலூர்:  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கிழிந்த, கறை படிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  நாடு முழுவதும் அரசு வங்கிகளை தவிர தற்போது தனியார் வங்கிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வங்கியில் உள்ள வரவு, செலவு கணக்குகளை இன்டர்நெட் ஆன்லைன் வசதி மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். இதுதவிர தனியார் வங்கிகள் ஐ மொபைல், மொபைல் பேங்கிங் என ஏகப்பட்ட வசதிகளை அள்ளி தருகின்றன.

 இதனால் மொபைல் போன் மூலமாகவே ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு எளிதாக பணப்பறிமாற்றம் செய்யலாம். பல புதிய சேவைகளை தனியார் வங்கிகள் அள்ளி தருவதால் பலரும் தற்போது வங்கி சேமிப்பு கணக்கு துவங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை பெறுவதற்கு வசதியாக நகர் மற்றும் கிராம புறங்களில் ஏடிஎம் மையங்கள் புதியதாக வைக்கப்பட்டு வருகின்றன. ஏடிஎம் வந்ததற்கு பிறகு வங்கிகளில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில் தனியார் வங்கிகள் அனைத்து இடங்களிலும் கிளைகள் அமைக்க முடியாததால் பொதுமக்கள் வசதிக்காக இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற அரசு வங்கிகளுடன் இணைந்து தங்கள் வங்கி சேவையினை பயன்படுத்த வசதி செய்துள்ளது.தனியார் வங்கிகளில் சேமிப்பு மற்றும் கரண்ட் அக்கவுன்ட் வைத்து ஏடிஎம் கார்டுகள் பெற்றுள்ளவர்கள் அவர்கள் வங்கி இணைந்துள்ள அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 4 முறை எவ்வித சேவை கட்டணமும் இல்லாமல் பணம் பெற்று கொள்ளலாம். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த வங்கிகளில் எடுக்கப்படும் ₹500, ₹200, ₹100 ரூபாய் தாள்கள் கிழிந்த நிலையிலும் கறைபடிந்தும் உள்ளது. பெரிய தொகையாக உள்ளதால் வெளியில் மாற்ற முடியவில்லை.

இதனால் ஏடிஎம்மில் எடுத்த தொகையை மாற்ற வங்கிகளுக்கு சென்று மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. பணத்தை பெற்ற கிளை மேலாளர் உடனடியாக இதை மாற்றி தர முடியாது. சம்மந்தப்பட்ட நோட்டின் நம்பரை எங்களுடைய கணக்கில் பரிசோதித்த பின்னர்தான் மாற்று ஏற்பாடு செய்ய முடியும் என்று பதில் கூறுகிறார். இதனால் அவசரத்திற்கு ஏடிஎம்மில் பணம் எடுத்து மீண்டும் வரிசையில் காத்து கிடந்து கிழிந்த நோட்டை மாற்றுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வங்கி ஏடிஎம்மில் பிற வங்கி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்தால் அதற்கான ரசீது வருவது கிடையாது. இதனால் கிழிந்த நோட்டை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு சென்றால் வங்கி ஊழியர்கள் எங்களுடைய ஏடிஎம்மில் எடுத்ததற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றனர்.

இதனால் தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் பணம் வைக்கும்போதே கறைபடிந்த மற்றும் கிழிந்த நோட்டு இல்லாமல் நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை வைக்க வேண்டும். வங்கி அதிகாரிகளும் பொதுமக்களின் நலன் கருதி ஒருமுறையாவது நோட்டுகளை நன்றாக சோதனை செய்ய வேண்டும். எந்த வங்கி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தினாலும் அதற்கான ரசீது வர ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: