புதுடெல்லி: மாநிலங்களைவையில் திமுக எம்பி கிரிராஜன் எழுப்பிய கேள்வியில், ‘‘2017ம் ஆண்டுக்கு முன்னதாக உள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை திருத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு ஏதேனும் மேற்கொண்டுள்ளதா? அப்படியென்றால் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களின் விவரங்கள் என்ன? அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? ஊதிய திருத்தத்தை கணக்கிடுவதற்கான விவரங்கள் என்ன?’’ என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் மாநில அமைச்சர் ஸ்ரீ ராமேஸ்வர் டெலி, ‘‘ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அந்தந்த அதிகார வரம்பில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளில் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் இடைவெளியில் மறுஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் குறைந்தபட்ச விகிதங்களைத் திருத்தவும், 2017 ஆம் ஆண்டு ஒன்றியத் துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் திருத்தப்பட்டன.
மேலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கவனித்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படை விகிதங்களில் மாறுபடும் அகவிலைப்படியை திருத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி முதல் அது அமலுக்கு வரும். குறிப்பாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை அவ்வப்போது மறுஆய்வு செய்வதற்கும், திருத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது’’ என தெரிவித்தார்.குமரியை இணைக்க வேண்டும்: மக்களவை எம்பி விஜய் வசந்த் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ஷெட்டியை சந்தித்து வலியுறுத்தியதில், ‘‘கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பியது. கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என அனைத்து அம்சங்களும் உள்ளது. குறிப்பாக இந்த மாவட்டம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் போதிய அளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது. அதனால் போதிய சாலை, தொலைத்தொடர்பு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிரதேசங்களில் சாகச விளையாட்டுக்கள் நடக்க ஏற்பாடு செய்வது, பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்வதற்கான ரயில்கள், கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதைத்தவிர இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தையும் இணைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பரிசீலனை செய்வதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.