சீனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட போலி ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட பொருட்கள் பறிமுதல்: இந்திய தர நிர்ணய அமைவனம் அதிரடி சோதனை

சென்னை: இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போலியான பி.எஸ்.ஐ ஸ்டாண்டர்ட் மார்க் கொண்ட பொருட்கள், சீனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை, ராயபுரத்தில் உள்ள கன்டெய்னர் சரக்கு நிலையத்தில் உள்ள யார்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 672 எல்.இ.டி லைட்டிங் செயின்கள் போலி பி.ஐ.எஸ் பதிவு முத்திரையை கொண்டிருப்பது கண்டறியப்பட்டன. அதேபோல், 10 ஆயிரம் பிளக்குகள் மற்றும் கேபிள்கள் அசெம்பிள் ஆகியவை ஐ.எஸ்.ஐ மார்க் கொண்டதாக இல்லை. மேலும், பிளக்குகள் மற்றும் கேபிள்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கட்டாய தர சான்றிதழின் கீழ் இருந்தன. இதனையடுத்து, அனைத்து பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, போலி பதிவு முத்திரையுடன் பொருட்களை வைத்திருந்ததாக இறக்குமதியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும், இதுபோன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, யாராவது ஐ.எஸ்.ஐ முத்திரையை தவறாக பயன்படுத்துவது தெரியவந்தால் பொதுமக்கள் தரமணியில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனம் தெற்கு மண்டல அலுவலகத்தில்  தகவல் தெரிவிக்கலாம். மேலும், பி.ஐ.எஸ் கேர் என்ற செயலியை பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: