தமிழ்நாடு அரசு முழுஒத்துழைப்பு கொடுத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசம்: ஒன்றிய அமைச்சர் கட்கரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வாலாஜா வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்த பிரச்னையால் அந்த  பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த சாலை மிகவும் மோசமாகியுள்ளது என்றும், தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும மோசமாக இருப்பதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையிலிருந்து ராணிப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசியதை, தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த சாலை சென்னை மாநகரம், சென்னை துறைமுகங்கள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை அணுகுவதற்கு பயன்படும் முக்கிய சாலையாகும். தற்போது இந்த நெடுஞ்சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அதனால்தான், சமீபத்தில் நான் சில மாவட்டங்களை பார்வையிட ரயிலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்த சாலை குறித்து குறிப்பிட்டு பேசிய நிலையில், உங்களது பொத்தாம் பொதுவான பதில் எங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, தமிழ்நாடு அரசு முழு ஆதரவு தந்து வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையிலான அதிவிரைவு மேம்பால திட்டத்துக்கான ராயல்டிக்கு, எங்கள் அரசு விலக்கு அளித்துள்ளது.

அதேபோல், எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவியுள்ளது. உங்களது கோரிக்கையை ஏற்று மண், கிராவல் ஆகியவற்றை எடுத்து செல்ல வழங்கப்பட்ட 3 மாத அவகாசத்தை ஓராண்டாக அதிகரித்து, கடந்த ஆண்டு மே 9ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்காக நிலம்  கையகப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாநில தலைமையகங்களில்  சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வனத்துறையின் அனுமதியும் பெற்று தரப்படுகிறது. எந்த தேசிய நெடுஞ்சாலை திட்டமும், துறைகளின் அனுமதி  கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தவில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டர்கள், அனுமதி வழங்கும் பணிகள் தலைமை செயலாளரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான நிலம், இடுபொருட்கள் விலை, ராயல்டி, உரிமை கட்டணம் ஆகியவை பரிசீலனையில் உள்ளன. இதுபோன்ற  முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நிலையில் மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவு தரவில்லை என்று, தாங்கள் நாடாளுமன்றத்தில் பதில் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. தங்களின் இந்த கருத்து, உண்மைக்கு புறம்பானது என்பதை நான் உறுதி செய்கிறேன். மாநில அரசும் ஒன்றிய அரசும் செயல்படுத்தும் திட்டங்களை எந்த பாரபட்சமும் காட்டாமல் விரைவுபடுத்த அரசு முயற்சி செய்துவருகிறது.

எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வைத்துள்ள கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க உங்களது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன். தேசிய நெடுஞ்சாலை 4ல் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வாலாஜா வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்த தொடர்பான பிரச்னையால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த சாலை மிகவும் மோசமாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னசமுத்திரம் சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று 2020 டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.  

சாலையின் மோசமான நிலையால் சாலையை பயன்படுத்துபவர்கள் பெரும் பிரச்னைக்கு ஆளாவதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த 6 வழி சாலை பணிகளை விரைந்து முடித்து சாலையின் தரத்தை நல்ல நிலைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோருகிறேன். இவ்வாறு அதில்கூறியுள்ளார். மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன், நேற்று முன்தினம் சாலைகள் மோசமாக உள்ளது குறித்து குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஆனால் இதை மறுத்து ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் விளக்கத்தை எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, தமிழ்நாடு அரசு முழு ஆதரவு தந்து வருகிறது.

* எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவியுள்ளது.

* நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிட மாநில தலைமையகங்களில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

* மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவு தரவில்லை என்று நாடாளுமன்றத்தில் பதில் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

Related Stories: