திண்டிவனம் அருகே சிப்காட் தொழிற்பூங்கா பணிகள் தீவிரம்: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் அமைந்துள்ளது. திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம், கொள்ளார், வெண்மணியாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு புறம்போக்கு நிலங்கள் போக சுமார் 720 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இதில் கொள்ளாரில் 197.46 ஏக்கரும், பெலாக்குப்பத்தில் 488.74 ஏக்கரும், வெண்மணியாத்தூரில் 34.6 ஏக்கர் நிலம் ஆக மொத்தம் 720 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டு, அப்பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். இதேபோல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சிப்காட் தொழிற்சாலை 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சிப்காட் தொழிற்சாலையை திமுக அரசின் திட்டம் என்பதால் இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டது.

இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோர் இடத்தை பார்வையிட்டு, தொடர்ந்து சிப்காட் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிப்காட் தொழிற்சாலையில் தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார். இதனால் தற்போது பெலாகுப்பம், கொள்ளார், வெண்மணியாத்தூர் ஆகிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் சிப்காட் பகுதியில் நிலம் வழங்கியவர்கள் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி வழங்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: