பங்குகள் தொடர் வீழ்ச்சியால் அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும்: எல்ஐசி தலைவர் பேட்டி

டெல்லி: பங்குகள் தொடர் வீழ்ச்சியால் அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்தார். அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரின. ஆனால், ஆளும் பாஜக அரசு அதானி விவகாரம் குறித்து பேசவில்லை.

அதேநேரம் அதானி நிறுவனத்தில்  நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி ரூ. 36,474.78 கோடி முதலீடு செய்துள்ளது. அதாவது சதவீத அடிப்படையில் மொத்த பங்குகளில் 4.23 சதவீதமாகும். அதேபோல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. எனவே எல்ஐசி, வங்கிகளின் நிதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், ‘நெருக்கடியில் சிக்கியுள்ள அதானி குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளை, எல்ஐசி நிர்வாக குழு விரைவில் சந்திக்கும்.

அப்போது அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும். அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதையும் கேட்டறிவோம். இருப்பினும், எல்ஐசி மற்றும் அதானி குழும அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த காலக்கெடுவை தற்போது கூற இயலாது’ என்று கூறினார்.

Related Stories: