ஓவேலி பேரூராட்சியில் வனத்துறை, வருவாய் நிலங்களை பிரித்து எல்லையில் அகழி, சூரிய ஒளி மின்வேலி

*மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கருத்தரங்கில் மக்கள் வலியுறுத்தல்  

கூடலூர் : வன நிலங்களையும் வருவாய் நிலங்களையும் தனியாக பிரித்து எல்லைகளில் அகழி  மற்றும் சூரிய ஒளி மின்வேலி அமைத்து வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு  அளிக்க வேண்டும், என மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மக்கள் வலியுறுத்தினர்.ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் தனியார் தோட்ட விடுதியில் மனித வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் வனத்துறை சார்பில் நே்ற்று நடந்தது. ஓவேலி வனச்சரகர் யுவராஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத்தலைவர் சகாதேவன், நியூ ஹோப் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுலைமான், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், தோட்ட மேலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வண்டலூர் வன உயிரின மேலாண்மை பயிற்சி மைய ஆய்வாளர்கள் டாக்டர் செமீர் மற்றும் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்டறிந்தனர். கருத்தரங்கில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசியதாவது: இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி புரியும் நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து காலையில் வழக்கமான நேரத்தை விட சற்று தாமதமாகவும் மாலையில் சற்று முன்னதாகவும் வேலைக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களை பணியிடங்களுக்கு கொண்டு  செல்ல தோட்ட நிர்வாகம் பாதுகாப்பான வாகன வசதி செய்து தர வேண்டும்.

    வன நிலங்களையும் வருவாய் நிலங்களையும் தனியாக பிரித்து எல்லைகளில் அகழி மற்றும் சூரிய ஒளி மின்வேலி அமைத்து வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். மக்கள் வாழ்விடங்களில் அவர்களின் அடிப்படை தேவைகளான சாலை, நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் பழைய வீடுகளை சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபடக் கூடாது.

 விவசாய பயிர்கள் வீடுகள் உடைமைகளை சேதப்படுத்தி  மனித உயிர்களை காவுவாங்கும் காட்டு யானைகள், வளர்ப்பு கால்நடைகளை பிடித்துச் செல்லும் சிறுத்தைகள், குடியிருப்புகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகள் உள்ளிட்டவற்றிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடலூரில் இருந்து ஆரூற்று பாறை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கருத்துக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனத்து தரப்பு மக்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்து  வன உயிரின மேலாண்மை இயக்குநரிடம் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், நாம் தமிழர், முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிகள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், சிறு தோட்ட உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வனவர்கள் சுதீர் குமார், சுபைத், வீரமணி தலைமையிலான வனத்துறையினர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: