அதானி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை  சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் 413 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்ந்து அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, அதானி குழும விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதானி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதானி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த விஷால் திவாரி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரும் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதானி விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தொடர்ந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories: