மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டாலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒன்றிய அரசின் சட்டம் தேவை: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: ‘டிஜிட்டல் உலகில் மாநிலங்கள் எல்லை வகுப்பது அர்த்தமற்றது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக ஒன்றிய அரசின் சட்டம் தேவை’ என மக்களவையில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், ‘‘தமிழத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பதற்காக, ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.  மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மசோதாவை உறுதி செய்ய ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது.  ?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

ஆன்லைன் சூதாட்டம், சட்டவிரோத பந்தயம் ஆகியவை முக்கியமான விஷயங்களாகும். இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை நாங்களும் உணர்ந்துள்ளோம். இதற்கான கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அக்கறை கொண்டுள்ளது. தற்போது 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த சிக்கலை சமாளிக்க முந்தைய சட்டங்களுக்கு பதிலாக தங்கள் சொந்த சட்டங்களை இயற்றி உளளன.

ஆனால், டிஜிட்டல் உலகில் மாநில எல்லை வகுப்பது அர்த்தமற்றது.  எனவே ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் சட்டம் அவசியம். இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துடன் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தமிழக ஆளுநர் ரவி குறித்து பேசியதற்கு பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘‘குறிப்பிட்ட மாநிலத்தில் ஏதாவது நடந்தால், அதுபற்றி இந்த அவையில் கருத்து தெரிவிக்கக் கூடாது’’ என்றார்.

Related Stories: