கட்சியை அடமானம் வைத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு ஆதரவு: பாஜ பிரமுகரும் முழுக்கு

தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் லியாகத் அலிகான் கூறுகையில், ‘2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன்.

அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என  பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன். சமீபகாலமாக பாஜவின் சித்து விளையாட்டுளில் ஓபிஎஸ் சிக்கி கட்சியை அடமானம் வைத்துவிட்டார். பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டதோடு,  இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தனது நிலைப்பாட்டை மாற்றி வரும் ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகியதோடு நான் நடத்தி வரும் எம்ஜிஆர் இயக்கம் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினால் கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்’ என்றார். இதேபோல பாஜ மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் உடனிருந்தார்.

Related Stories: