குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

டெல்லி: குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது; குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. உணவு பாதுகாப்பு ஆணையரின் அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில்,”குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ளது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: