பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டின் பிரதான சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும் குழந்தைகள் உள்பட அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவம் அபாயநிலை உள்ளது. இந்த கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டான சோளிங்கர் பிரதான சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் மார்க்கெட் இயங்கி வருவதால், எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

இந்த பிரதான சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவுநீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. தற்போது அவை சாலையில் குளம் தேங்கி நின்று, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாயை கடந்த சில மாதங்களாக பேரூராட்சி அதிகாரிகள் முறையாக சுத்தப்படுத்தி பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளிப்பட்டு பிரதான சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு பரவியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

மேலும், இந்த கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பிரதான சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அதிகளவு மக்கள் நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க, அந்த கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தி, அக்கால்வாயை முறையாக சுத்தப்படுத்தி பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் கபிலா சிரஞ்சீவி உள்பட அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: