வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து

திருமலை : வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி 4 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 11ம் தேதி(சனிக்கிழமை) முதல் 19ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும்(ஆழ்வார் திருமஞ்சனம்) நேற்று  நடைபெற்றது. காலை சுப்ரபாதம், தோமாலை சேவை,  கொலுவு, மற்றும் பஞ்சங்கம் படிக்கப்பட்டது. பின்னர்,  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி காலை 6.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டது. தொடர்ந்து கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், பூஜை பொருள்கள் உள்ளிட்ட  அனைத்து இடங்களும் தண்ணீரால் தூய்மை படுத்தப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. 11 பிறகு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், திருப்பதியை சேர்ந்த மணி கோயிலுக்கு 2 திரைகளை(ஸ்கிரீன்) காணிக்கையாக வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் சிறப்பு துணை தலைவர் வரலட்சுமி, அர்ச்சகர் பாலாஜி ரங்காச்சாரியா, கண்காணிப்பாளர் முனி செங்கல்ராயலு, கோயில் ஆய்வாளர் கிரண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: