இறச்சகுளம் - ஆலம்பாறை இடையே சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்

* போக்குவரத்து மாற்றம் செய்ய கோரிக்கை

நாகர்கோவில்: இறச்சகுளம் - ஆலம்பாறை இடையே சாலை சீரமைப்பு பணி தொடங்கிய நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யாததால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், ஆலம்பாறை, செண்பகராமன்புதூர் சாலை வழியாக செல்கின்றன. தற்போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து பகுதி, பகுதியாக சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின.

முதற்கட்டமாக இறச்சகுளம் முதல் ஆலம்பாறை வரை சுமார் நான்கரை கிலோ மீட்டர் தூரம் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்த ஆர்.பி.ஆர் நிறுவனம் இந்த சாலை பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்து செய்து வருகிறது. இந்த சாலை பணிகள் நேற்று முன் தினம் தொடங்கின. ஏற்கனவே போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால்  போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட வில்லை.

இருப்பினும் நேற்று முன் தினம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் லேயர் போடப்பட்ட நிலையில், நேற்று 2 வது நாளாக பணியை தொடங்க பணியாளர்கள் வந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படாததால், புதிதாக போடப்பட்ட பகுதிகளில் சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து நேற்று காலை, சாலை பணி தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டது.

போக்குவரத்தை நிறுத்தினால் மட்டும் தான் சாலை பணியை மேற்ெகாள்ள முடியும் என்று பணியாளர்கள் கூறினர். இந்த சாலை கனரக வாகனங்கள் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையாகவும் இருந்து வருகிறது. எனவே பணிகளை வேகமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து, பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: