போக்சோ வழக்கில் தந்தைக்கு எதிராக சாட்சியளிக்க நிர்பந்தம் நீதிபதி முன் மகள், மகன் தீக்குளிக்க முயற்சி: நெல்லை கோர்ட்டில் பரபரப்பு

நெல்லை: நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் தந்தைக்கு எதிராக சாட்சியம் அளிக்க போலீசார் நிர்ப்பந்திப்பதாக கூறி மகனும், மகளும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி பகுதியைச் சேர்ந்தவருக்கு 17 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த  2021ம் ஆண்டு தனது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மகன், மகளிடம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற இருந்தது.

இந்நிலையில் தந்தைக்கு எதிராக சாட்சியம் அளிக்க வேண்டும் என போலீசார் அவர்களை நிர்ப்பந்தம் செய்ததாக கூறி அவரது மகளும், மகனும் நீதிமன்றத்தில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நீதிபதி முன்பாக சென்று தந்தைக்கு எதிராக சாட்சியம் அளிக்கமாட்டோம் எனக் கூறி தற்கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்த வக்கீல்கள், நீதிமன்ற  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: