பூம்பாறை ரப்பர் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள்

குலசேகரம்: அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான பகுதிகளில் ஏராளமான ரப்பர் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக சபரி மலை சீசன்களில் கேரளாவில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து குமரி மாவட்டத்துக்கு வருகின்றன. பின்னர் குறிப்பிட்ட சில நாட்களுக்கு இங்கேயே சுற்றித்திரிகின்றன. இவை உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது விளைநிலங்களுக்கு வருவது வாடிக்கை. இந்த நிலையில் குற்றியாறு அருகே பூம்பாறை பகுதியில் அரசு ரப்பர் கழக தோட்டம் உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென மரங்கள் ஒடிந்து விழும் சத்தம் கேட்டுள்ளது.

அங்கு மின்சாரமும் தடைபட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் குடியிருப்பு மக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு குட்டிகளுடன் யானைக்கூட்டம் உலாவிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெளியே வந்தால் யானைகள் கொன்றுவிடும் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து விடிய விடிய தூங்காமல் தவித்தனர். ஆனால் இன்று காலையும் யானைகள் அங்கிருந்து செல்லாமல் ரப்பர் தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகின்றன.

இதனால் ரப்பர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வெளியே சென்று பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில், வனவிலங்குகள் ரப்பர் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுண்டி இழுக்கும் வாசனை

அரசு ரப்பர் கழக தோட்டங்களில் தற்போது முதிர் ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் ஊடுபயிராக அன்னாசி, வாழை, மரச்சீனி வைககளை நடுவதற்கு குத்தகை விடப்படும்.  அன்னாசி பழங்களை யானைகள் விரும்பி உண்கின்றன. அதன் வாசனை சுண்டி இழுப்பதால் யானைகள் அதனை உண்பதற்காக அடிக்கடி ரப்பர் தோட்டங்களுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

Related Stories: