2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை பாதிவழியில் இறக்கியதாக கூறி அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்: கலவை அருகே போக்குவரத்து பாதிப்பு

கலவை: கலவை அருகே 2 குழந்தைகளுடன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை பாதிவழியில் இறக்கியதாக கூறி அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த  வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் நேற்று மதியம் தனது 2 பெண் குழந்தைகளுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் அரசு பஸ்சில் ஊர் திரும்பினார். ஆரணியில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் பஸ்சில் ஏறினார். ஆனால் வாழைப்பந்தல் செல்வதற்கு முன்பே சுமார் 4 கிலோ மீட்டர் முன்னால் உள்ள மேல்புதுப்பாக்கம் அருகே அனைத்து பயணிகளும் இறங்கினர்.

இதனால் 2 குழந்தைகளுடன் இருந்த பெண்ணையும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் வலுக்கட்டாயமாக இறக்கியதாக கூறப்படுகிறது. செய்வதறியாமல் திணறிய அந்த பெண், ‘எனக்கு இங்கிருந்து ஊர் செல்ல வழி தெரியாது. உச்சி வெயிலில் உடல்நலம் பாதித்த என்னால் 2 குழந்தைகளுடன் நடந்து செல்ல முடியாது. பாதி வழியில் இறக்கிவிடுவது நியாயமா?’ எனக்கேட்டுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணின் பேச்சை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உதாசீனப்படுத்தினார்களாம். பின்னர் அந்த பெண்ணை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, ‘ஏறிய இடத்தில் இறக்கிவிடுகிறோம்’ எனக்கூறி மீண்டும் ஆரணியில் கொண்டு சென்று இறக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், 2 குழந்தைகளுடன் தவித்துள்ளார். ஏற்கனவே உடல்நலம் பாதித்த அந்த பெண்ணுக்கு ஆரணி பஸ் நிலையத்தில் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைக்கண்ட சகபயணிகள் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வேறு ஒரு தனியார் பஸ்சில் அந்த பெண், வாழைப்பந்தலுக்கு திரும்பியுள்ளார். தாமதமாக வீடு திரும்பிய அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டதாக கூறப்படும் அந்த பஸ்சை, நேற்றிரவு வாழைப்பந்தல் அருகே முற்றுகையிட்டு அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தட்டிக்கேட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் எஸ்ஐ ரமேஷ்  தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக போக்குவரத்து பாதித்தது.

Related Stories: