விமானத்தில் இடையூறு செய்த பயணிகள் ஓராண்டில் 63 பேருக்கு பயண தடை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த ஆண்டு 63 பேரை விமானப் போக்குவரத்து ஆணையம் சோ்த்திருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், ‘விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக, விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 143 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும்  63 பேர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் சார்பில் வகுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து விதிகளின் (சி.ஏ.ஆர்) கீழ் விமான நிறுவனங்களில் உள்குழுக்கள் அமைக்கப்பட்டன.

அக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இடையூறு செய்யும் பயணிகள் பயணிக்கத் தடை விதித்து அவர்கள் அனைவரும் பயணிக்க தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கடந்த 2017ம் ஆண்டில் ஒருவரும், 2020ம் ஆண்டில் 10 பேரும், 2021ம் ஆண்டு 66 பேரும், கடந்த ஆண்டில் 63 பேரும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு பட்டியலில் இணைந்த 63 பேரில் 46 பேர் இண்டிகோ நிறுவனத்தாலும், 16 பேர் விஸ்டாரா நிறுவனத்தாலும், ஒருவர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தாலும் தடை விதிக்கப்பட்டவர்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: