4 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு சோறு போடாமல் மகன்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்

*குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெற்றோர் கதறல்

*நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு டிஆர்ஓ உத்தரவு

திருப்பத்தூர் : ‘4 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு சோறு போடாமல் மகன்கள் கொடுமைப் படுத்துகிறார்கள்’ என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் கதறியபடி மனு அளித்தனர். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சினைகள், குடிநீர் வசதி  என மொத்தம் 325 மனுக்களை  பெற்றுக்கொண்டு  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் அருகே உள்ள மூலகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த லிங்கன், அவரது மனைவி ராஜம்மாள் ஆகிய 2 பேரும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் எதிரே கீழே படுத்துக்கொண்டு உருண்டு தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பத்தூர் அடுத்த மூலகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த லிங்கன்(80), எனது மனைவி ராஜம்மாள். எங்களுக்கு வயதான நிலையில், எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் இருந்தது. அதனை 2013ம் ஆண்டு எனது இரண்டு மகன்களான வீரன், திருப்பதி ஆகிய இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டேன். தற்போது இருவரும் எங்களை பார்ப்பதில்லை. எங்களுக்கு உணவு அளிக்காமல் கஷ்டப்படுத்தி வருகின்றனர்.

வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் எங்களை சரமாரியாக தாக்குகின்றனர். இதனால் நாங்கள் மிகவும் இரு மகன்களிடம் அவதிப்பட்டு வருகிறோம். மகன்கள் மீது எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவித்திருந்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட டிஆர்ஓ வளர்மதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.

நாட்றம்பள்ளி அடுத்த நந்திபெண்டா கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா அளித்த மனுவில், ‘2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை எங்களுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். எனக்கு ஒன்றரை  வயதில் பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் சுப்பிரமணி குழந்தையையும் என்னையும் பார்க்காமல் இருந்து வருகிறார். மேலும் எங்களை அடித்து துன்புறுத்துகிறார்.

தற்போது எனது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது. அதனை அறுவை சிகிச்சை முலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவத்தில் என் குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கூட எனது கணவர் என் குழந்தையை பார்க்க வரவில்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே எனது கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், ‘மக்கள் குறை தீர்வு  கூட்டத்தில் அளித்த நிலுவையில் உள்ள மனுக்களை ஒரு வார காலத்திற்குள்  அதிகாரிகள் முடிக்க வேண்டும். பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அளித்த  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உடனடியாக அதற்கு பதில் அளிக்க  வேண்டும். முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி,  கல்லூரி, பொதுமக்கள், அரசு அலுவலர்கள்

முன்பதிவு செய்ய வேண்டும் என  கூறப்பட்டு இருந்தது.

ஆனால்  இதுவரை மாவட்டத்தில்  சுமார் ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இது மிக, மிக குறைவு ஆகும்.  ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும்  போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்’’ என்று பேசினார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: