மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : மாவட்ட தொழில் மையம் சார்பில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்திற்கான சாவியை கலெக்டர் அம்ரித் வழங்கினார். ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சாலை, குடிநீர், வீட்டுமனை பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து 133 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கனரா வங்கி, எடக்காடு கிளையின் சார்பில் ஸ்ரீதரன் என்ற பயனாளிக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பொலிரோ வாகனத்திற்கான சாவியை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் கடந்த மாதம் 9ம் தேதி நடந்த ரத்த தான முகாமில் ரத்த தானம் அளித்த தனியார் ஓட்டல் ஊழியர்கள் 29 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரத்த தான முகாமினை சிறப்பாக மேற்கொண்டதற்காக ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தாகுரூசிற்கு சான்று வழங்கப்பட்டது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சி செயலராக பணியாற்றி வரும் சங்கரன் என்பவருக்கு 2021-22ம் ஆண்டிற்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அமைச்சு பணியின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவில் இளநிலை உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

செட்டிநாடு சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ராணி மெய்யம்மாள் தொண்டு நிறுவனம் சார்பில் குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 300 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.05 லட்சம் மதிப்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போலி மதுபானங்கள் மற்றும் போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: