விக்கிரவாண்டி அருகே பரபரப்பு அதிகளவு கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

*தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி மேம்பாலம் அருகே நேற்று காலை 11 மணியளவில் அதிகளவில்  கரும்புகளை ஏற்றிக்கொண்டு, டிராக்டர் சென்றது. சிந்தாமணி மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென டிப்பர் பின்பக்க வீல் உடைந்தது. இதனால் டிப்பரில் இருந்த கரும்பு அனைத்தும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி கவிழ்ந்தது. இதில் பின் தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் இடைவெளி விட்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சர்வீஸ் சாலையில் வாகனங்களை திருப்பி அனுப்பி பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான டிராக்டர் டிப்பரை அப்புறப்படுத்தினர்.  இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக விக்கிரவாண்டி பகுதிகளில் தற்போது கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவு எடையை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்வதால், தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

 இதேபோல் கடந்த 3ம்தேதி அதிகாலை அதிக கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: