ஜமுனாமரத்தூர் காவல் நிலையம் தரம் உயர்த்தப்படுமா? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

போளூர் : ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டரை நியமனம் செய்து, தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 272 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 63 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது புகார்களை விசாரிக்க ஜமுனாமரத்தூர் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 55 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவல் நிலையம் தொடங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எல்லையில் 65 கிராமங்கள், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் 156 கிராமங்கள் என மொத்தம் 221 கிராமங்களின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு இந்த காவல் நிலையத்திற்கு இருந்தது. பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள 65 மலை கிராமங்கள் அந்த மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது, 156 மலை கிராமங்கள் இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜமுனாமரத்தூர் காவல் நிலையம் தொடங்கிய காலத்தில் 28 போலீசார் இருந்தனர். குற்றங்கள் மற்றும் மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் தற்போது 9 போலீசார் மட்டுமே உள்ளனர். மேலும், சிவில் கோர்ட்டுக்கு  போளூருக்கும், கிரைம் கோர்ட்டுக்கு வேலூர் மாவட்டம் மற்றும் வாணியம்பாடிக்கும்  செல்ல வேண்டிய நிலை இன்றளவும் உள்ளது. ஜவ்வாது மலை தனி தாலுகா உருவாக்கப்பட்ட பிறகும் இந்த மாவட்ட எல்லை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது, தமிழகத்தில் புறக்காவல் நிலையங்கள் இல்லாத நிலையில் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் மட்டும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகி

றது.ஜமுனாமரத்தூரில் இருந்து 120 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்திற்கு ஒரு போலீஸ் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இங்கு செம்மரம் கடத்தல், கள்ளச்சாராயம், கொலை குற்றங்களுக்கு பஞ்சம் இல்லாத நிலையில், பெரும்பாலான பிரச்னைகள் காவல் நிலையத்திற்கு வராமலேயே கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

விபத்து மரணம், தற்கொலை, கொலை, துப்பாக்கி சூடு, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற எந்த பெரிய வழக்காக இருந்தாலும் இன்ஸ்பெக்டர்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், 52 கி.மீ தூரத்தில்  உள்ள கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் தான் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகி

றார்.

இதனால், அவசர காலத்தில் பொதுமக்கள் நேரடியாக இன்ஸ்பெக்டரை சந்திக்கவோ அல்லது இன்ஸ்பெக்டர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதோ இயலாத நிலையாகவே உள்ளது. இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில்  நேரடி சப்-இன்ஸ்பெக்டராவது இங்கே நியமிக்கப்படுவது அவசியம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக நேரடி சப்-இன்ஸ்பெக்டர்கள் யாரும் இல்லாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களே பணிபுரிந்து வருகின்றனர்.  எனவே, ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தை தரம் உயர்த்தி தேவையான போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டரை நியமனம் செய்ய வேண்டும். புலியூர், நம்மியம்பட்டு  கிராமங்களில் புதிய காவல் நிலையம் தொடங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற

னர்.

Related Stories: