சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 5 கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இன்றூ பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார். கடந்த 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்மன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

Related Stories: