காதல் மனைவி கடத்தல் வழக்கில் இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் பரபரப்பு

தென்காசி: தென்காசி அடுத்த கொட்டாகுளத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினித்தும், வல்லம் முதலாளி குடியிருப்பை சேர்ந்த கிருத்திகாவும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கடந்த 25ம் தேதி தனது உறவினர்களுடன் கிருத்திகாவை கடத்தி சென்றனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் கிருத்திகா பெற்றோர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கிருத்திகாவை இரண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கிருத்திகா, வினித் ஆகியோர் அடுத்தடுத்து வீடியோ, ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கிருத்திகா வெளியிட்ட வீடியோவில், ‘தனது உறவினர் மைத்திரிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் இருக்கிறேன். எந்தவித பிரச்னையும் இல்லை. இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விட வேண்டும்‌. அவரவர் வழியில் சென்றால் எல்லோருக்கும் நல்லது’ என்று அதில் கூறியிருந்தார். தொடர்ந்து கிருத்திகா, ‘தனது காதல் கணவர் வினித்திடம் வழக்கை வாபஸ் வாங்க கோரி கெஞ்சிய ஆடியோ வெளியானது. அதில், இருவரும் சுமூகமாக பிரிந்து சென்று விடுவோம்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக நேற்று கிருத்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், நான் எனது கணவர் மற்றும் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த தொந்தரவும், அழுத்தமும் இல்லை. வினித் உடன் சென்றதற்கு பிறகு சில விஷயங்களை நான் உணர்ந்தேன். அதனால் தான் அப்பாவுடன் செல்வதாக முடிவு செய்தேன். அத்துடன் அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பிரச்னை இழுத்துக் கொண்டே போகிறது. வினித் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் கொடுத்தது எனக்கு தெரியாது.

என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. அதன் பிறகு எனது அப்பாவிடம் பணம் கேட்டு டிமாண்ட் பண்ண ஆரம்பித்தார்கள். அதனால் தான் கணவர் மைத்திரிக்கை தொடர்பு கொண்டு அப்பாவை வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறினேன். இந்த பிரச்னைக்கும் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன். எனது விருப்பப்படி தான் எனது அப்பா அழைத்துக் கொண்டு வந்தார். இத்துடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது என்று கூறியுள்ளார்.

‘‘கிருத்திகா நேரில் வரவேண்டும்’’

கிருத்திகாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து வினித் கூறுகையில், ‘‘நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். மாதம் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கிறேன். நாங்கள் எதற்காக பணம் கேட்க வேண்டும்? எனது மனைவியை கடத்திய கும்பல், எனது மனைவிக்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்று பேச வைத்துள்ளனர். கிருத்திகா என்னுடன் வந்த போது ஒரு பைசா கொண்டு வரவில்லை‌. சாமி புத்தகம் ஒன்றை மட்டுமே எடுத்து வந்தார். ஜனவரி 25ம் தேதி அவரை வலுக்கட்டாயமாக 50 முதல் 100 பேர் முன்னிலையில் தூக்கிச் சென்றனர். அப்போது அவர் கதறினார். எனது மனைவி கிருத்திகா நேரில் வர வேண்டும். போலீசார் அவரை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

Related Stories: