தென்னையில் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்-வேளாண் அதிகாரி விளக்கம்

கிருஷ்ணகிரி : தென்னையில் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்தார்.சூளகிரி தாலுகா, அத்திமுகம் கிராமத்தில் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவிகள் சாருகேஷினி அம்பிகா, தீபா, ஹபீபா, காவியா, லின்சி, மாலினி ஸ்ரீ, மோனிகா, நர்மதா, நிருபாஷினி, வினோதினி ஆகியோர் ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவத்திற்காக, கிருஷ்ணகிரி அடுத்த மலைசந்து கிராமத்தில் பட்டறிவு பயணமாக 75 நாட்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் கிருஷ்ணகிரி வட்டாரம், கங்கலேரி கிராமத்து விவசாயிகளுக்கு தென்னையில் தஞ்சை வாடல் நோயைக் கட்டுப்படுத்த போர்டோ பசையைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த செய்முறை விளக்கம், அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரிப் உதவிப்பேராசிரியை காவியா, மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது: தஞ்சை வாடல் நோய் (கானோடெர்மா வாடல்) இலைகளின் வெளிப்புற சுழல் மஞ்சள் மற்றும் தொங்குதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. தொடர்ந்து தண்டுகளின் அடிப்பகுதியில் உள்ள விரிசல்கள் வழியாக சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வெளியேறி மேல்நோக்கி பரவுகிறது. திரவம் வெளியேறும் பகுதியில் திசுக்களின் சிதைவு, தண்டுகளின் அடித்தள பகுதி அழுகும் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் அரைதட்டுக் காளான்கள் தோன்றும்.

இதற்கு சுண்ணாம்பு ஒரு கிலோ, மயில் துத்தம் (காப்பர் சல்பேட்) - 1 கிலோ, தண்ணீர் 10 லிட்டர் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து போர்டோ பசை தயாரிக்க வேண்டும். சுண்ணாம்புக்கரைசலில் காப்பர் சல்பேட் கரைசலை மெதுவாக ஊற்றி மெதுவாக கிளறவும், அதிக தாமிரம் இருப்பதைக் கண்டறிய, புதிதாக ஒரு டிப் செய்யவும்.

நோயுற்ற தென்னை மரங்களை 10 சதவீத போர்டோ பசையில், வருடத்திற்கு 3 முறை நனைப்பது தஞ்சாவூர் வாடல் நோயின் தீவிரத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தேவையான ரசாயனங்கள் தாமிர சல்பேட் மற்றும் சுண்ணாம்பு ஆகும். இது எளிதாக சந்தையில் கிடைக்கும். மற்ற வணிக பூஞ்சைக் கொல்லிகளுடன் ஒப்பிடுகையில் இது மனிதர்களுக்கு குறைவான நச்சுத்தன்மை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: