கிருஷ்ணகிரியில் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகை பூக்கள் விளைச்சல் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகை, சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, மாவட்டத்தில் கடும் பனிபொழிவால், மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது கடும் பனிபொழிவால், மல்லிகை விளைச்சல் வழக்கத்தைவிட குறைந்துள்ளது. பொங்கல் விழாவின் போது கிலோ ₹2 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையானது. கடந்த சில நாட்களாக சராசரியாக கிலோ ₹1000 முதல் ₹1500 வரை விலை போகிறது.

காலை 10 மணிக்கு பிறகே பூக்கள் பறிக்க முடிகிறது. கடும் பனியால் பூ மொட்டுக்கள் மலர்வது இல்லை. வெயிலின் தாக்கம் வந்த பிறகே, பூக்கள் மலர்ந்து பறிக்க உகந்ததாக உள்ளது. இதே போல், செடிகளில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், மருந்து தெளிப்பு, பராமரிப்பு செலவுகள் அதிகமாக உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்தும் பயனில்லை. பெங்களூரு சந்தையை பொறுத்தவரை, நேரத்திற்கு தகுந்தவாறு பூக்கள்  விற்பனையாகும். செடிகளில் பூக்கள் வரத்தும் 70 சதவீதம் குறைந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: