பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது.

 முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க அஸ்திரதேவரை எடுத்து வந்து கடலில் நீராடும் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை, அதன் பின்னர் கோயில் திருக்காப்பிடுதல் நடந்தது.

 

முன்னதாக மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோயிலில் இருந்து எழுந்தருளி முக்கியவீதிகள் வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  இரவில் சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்ந்தார். தைப்பூசத் திருவிழாவில் முருகப்பெருமானை வழிபடுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள், திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். லட்சக்கணக்கானோர் திரண்டதால் கடற்கரை, கோயில் வளாகம், ரதவீதிகள் என திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்களாகவே தென்பட்டனர்.

திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் முதல்படை வீடான மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து முத்துக்குமார சுவாமியை வழிபட்டனர். மதுரையை சேர்ந்த பக்தர்கள் சிலர் கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Stories: