வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த விவசாயி: பாராட்டு குவிகிறது

தாராபுரம்: வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாணவரை தனது துண்டால் மடக்கிப் பிடித்த விவசாயிக்கு பாராட்டுகள் குவிகிறது. திருப்பூர்  மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் கனரா வங்கி கிளை உள்ளது. நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் பர்தா, முகமூடி மற்றும் கருப்பு கை உறைகளை  அணிந்தபடி ஒருவர் பெண் வேடத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கி மற்றும்  டைம் பாம் உள்ளிட்டவைகளை காட்டி வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் வாடிக்கையாளர் அமர்ந்திருக்கும் இடத்தில்  அலங்கியம் பகுதியை சேர்ந்த விவசாயி கருணாகரன் (59) என்பவர்  அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பு சென்ற கொள்ளையன், ‘‘என்னை பிடிக்க  முயன்றால் துப்பாக்கியால் சுடுவேன், டைம் பாமை வெடிக்கச் செய்து விடுவேன்’’  என மிரட்டினான். திடீரென அந்த கொள்ளையன் கீழே குனிந்த  நேரத்தில் உஷாரான கருணாகரன் தன் கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து அவனது தோளில் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றார். அவரது பிடியில்  இருந்து தப்பிக்க கொள்ளையன் முயன்றான்.

சத்தம் கேட்டு வங்கி பணியாளர்களும், வாடிக்கையாளர்கள் சிலரும் சேர்ந்து  கொள்ளையனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பர்தா மற்றும் முகமூடியை  அகற்றியபோது பெண் போல் வேடமணிந்து வந்தது அலங்கியம் காந்திநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சுரேஷ் (19) என தெரிய வந்தது.  அலங்கியம் போலீசார் சுரேஷை கைது  செய்தனர். வங்கிக்குள் மாறு வேடத்தில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற சுரேஷ் கையில் துப்பாக்கியை  காட்டி மிரட்டியபோதும் எவ்வித பயமும் இல்லாமல், துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்த கருணாகரனுக்கு பாராட்டு  குவிகிறது. சுரேஷை பிடித்தபின்னர்தான் அவர் தனது பக்கத்து வீட்டை  சேர்ந்தவர் என்பது கருணாகரனுக்கு தெரியவந்தது.

இது குறித்து கருணாகரன் கூறுகையில், வங்கிக்கு பணம் கட்ட சென்றேன். அப்போது கையில் துப்பாக்கியுடன் மேலாளர் அறையிலிருந்து கேசியர் அறைக்கு  சென்று மிரட்டுவதை அறிந்ததும் ஆத்திரமடைந்தேன். என் அருகே வந்தபோது எனது  மேல் துண்டால் அவனது கழுத்தைச் சுற்றி கீழே தள்ளி ஏறி மிதித்து கொண்டேன்.  அப்போது வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் வந்து பிடித்துவிட்டனர்.   அவனது முகமூடியை அகற்றியபோதுதான் அந்த நபர் எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த  கல்லூரி மாணவன் சுரேஷ் என்பது எனக்கு  தெரிந்தது’’ என்றார். சுரேஷை கருணாகரன் மடக்கி பிடிக்கும் வீடியோ தற்போது  வைரலாகியுள்ளது.

Related Stories: