பொதுக்குழு உறுப்பினர்கள் பூர்த்தி செய்த படிவத்தை தேர்தல் ஆணையத்தில் இன்று அதிமுக சமர்ப்பிக்கிறது: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லி பயணம்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக அணிகளில் ஒன்றான ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி அணி சார்பில் தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இரு அணி தலைவர்களும் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை இடைத் தேர்தலில் வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எடப்பாடி தரப்பு இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்திய தேர்தல் ஆணையம், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர்  தங்கள் கருத்துகளை தெரிவிக்க உத்தரவிட்டது. பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பொதுக்குழுவை கூட்டி பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். பொதுக்குழுவில் யாருக்கு அதிகமாக ஆதரவு இருக்கிறதோ, அது குறித்து இறுதி அறிக்கை தயார் செய்து தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்னும் வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய நாளே உள்ளது.

எனவே, அதிமுக சார்பில் பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாது என்பதால், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை மற்றும் படிவத்தை அனுப்பினார். 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள், 70 மாவட்டச் செயலாளர்கள், 255 சார்பு அணிச் செயலாளர்கள், 61 எம்எல்ஏக்கள், 3எம்பிக்களுக்கு அனுப்பினார். அதை நேற்று இரவுக்குள் பூர்த்தி செய்து அனுப்பும்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, ஓபிஎஸ் அணி தவிர்த்து, அனைத்து தரப்பினரும் படிவத்தை அவைத் தலைவருக்கு அனுப்பினர். அதை பெற்றுக் கொண்ட அவர், இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளார். அதை இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்க உள்ளார்.

வேட்புமனு தாக்கல் முடிவுவதற்குள் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் என்று தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் தரப்பு தமிழ்மகன் உசேனின், கடிதத்தை மற்றும் அவர் குறிப்பிட்டு இருந்த வேட்பாளரை நிராகரித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. அதையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது வேட்பாளருக்கு எத்தனை பேர் ஆதரவு, வேட்பாளருக்கு எத்தனை பேர் ஆதரவு என்று குறிப்பிட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி சின்னம் ஒதுக்கினால் கூட, அது 27ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுக்குழு பற்றி எந்த முடிவும் யாரும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: