துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியின் சகோதரி சாருமதி சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். சாருமதி உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என 2 சகோதரிகளும், ராஜமூர்த்தி என ஒரு சகோதரரும் உள்ளனர். இதில் சாருமதி சென்னையில் வசித்து வந்தார். உடன் பிறந்தவர்கள் மீது துர்கா ஸ்டாலின் எப்போதும் பாசமாக இருப்பார். இந்தநிலையில், சாருமதி மறைவு அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாருமதியின் கணவர் சண்முக சுந்தரம், மகன் கார்த்திகேயன், மருமகள் ரேவதி, மகள் அபிராமி, மருமகன் விக்னேஷ் மற்றும் காவியா, கவிநிலா, ஆதிரா ஆகிய பேரக்குழந்தைகள் உள்ளனர்.  மறைந்த சாருமதியின் உடல் சென்னை எழும்பூரில் காசாமேஜர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  மேலும் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, தயாநிதி மாறன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட எம்பிக்கள்,  கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை சாருமதியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories: